Tuesday, June 21, 2011

பழங்களில் இருந்து கார்களை உருவாக்கலாம்: விஞ்ஞானிகள் தகவல்

அன்னாசி, வாழைப்பழம் ஆகியவற்றில் இருந்து தயாரிக்கப்படும் நானோ செல்லுலோஸ் நார்களை பிளாஸ்டிக் போல பயன்படுத்தி கார்களை உருவாக்க முடியும் என்ற பிரேசில் ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர்.

இயற்கை பொருட்களில் இருந்து பைபரை உருவாக்குவது தொடர்பாக பிரேசிலின் சாபாலோ மாநில விவசாய அறிவியல் பல்கலைக்கழகத்தில் அல்சிடஸ் லியோ என்ற விஞ்ஞானி தலைமையில் ஆராய்ச்சி நடத்தப்பட்டது.

ஆய்வு பற்றி அவர் கூறியதாவது: கார் தயாரிப்பில் பிளாஸ்டிக் பயன்பாடு அதிகம் உள்ளது. சுற்றுச்சூழலை பாதிக்காத இயற்கை பைபர்களை பயன்படுத்துவது தொடர்பாக ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட்டது.

வாழைப்பழம், அன்னாசி போன்ற பழங்களில் இருந்து தயாரிக்கப்படும் பைபர் இழைகள் இதற்கு பயன்படும் என்று தெரியவந்துள்ளது. இப்பழங்களில் இருந்து தயாரிக்கப்படும் நானோ செல்லுலோஸ் இழைகளை பயன்படுத்தி டேஷ்போர்டு, பம்பர், சைடு பேனல்கள் உள்பட பல பாகங்களையும் தயாரிக்க முடியும்.

இரும்பு, மெட்டல் ஷீட்களுக்கு பதிலாக எடை குறைந்த பைபர் இழைகளை பயன்படுத்துவதால் காரின் எடையும் வெகுவாக குறையும். எரிபொருள் பலமடங்கு மிச்சமாகும்.

தற்போது கார்களில் பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருட்கள் அதிக வெப்பத்தில் உருகிவிடும் அபாயம் கொண்டவை. பெட்ரோல், டீசல் கசிவு காரணமாக தீப்பிடித்தால் அவையும் சேர்ந்து எரியும் ஆபத்தும் உண்டு.

பழங்களில் இருந்து கிடைக்கும் பைபரை பயன்படுத்தினால் இந்த ஆபத்துகள் இருக்காது. பழ பைபரின் உறுதித் தன்மை குறித்து தீவிர ஆய்வு நடந்து வருகிறது. ஆராய்ச்சி முடிவடைந்த பிறகு இந்த வகை கார்கள் அறிமுகமாகும்.

0 comments:

Post a Comment