Thursday, June 23, 2011

ஒரு கடத்தலும் சில பேஸ்புக் அப் டேட்டுகளும்

உலகை ஒரு பூதம் பிடித்தாட்டுகிறது.பேஸ்புக் என்னும் பூதம்!அந்த பூதம் எதையும் பகிர்ந்து கொள்ள தூண்டுகிறது.நேரம் காலம் பார்க்காமல் எப்போதும் அப் டேட்டுகளை வெளியிட வைக்கிறது.எங்கிருந்தாலும் என நடத்தாலும் பேஸ்புக்கில் தெரிவித்து விடும் மோகத்திற்கு பய‌னாளிகளை மாற்றியிருக்கிறது அது.

வம்பில் மாட்டிக்கொள்வோம் என்று தெரிந்திருந்தும் பலர் வாழ்க்கை நிகழ்வுகளை அவை நிகழும் போதே
பேஸ்புக்கில் பதிவேற்றி விடுகின்றனர்.

இந்த பேஸ்புக் அடிமைத்தனத்திற்கு சமீபத்திய உதாரணமாக அமெரிக்க வாலிபர் ஒருவர் கடத்தல் நாடகத்திற்கு மத்தியில் அதில் அரங்கேறிய காட்சிகளை பேஸ்புக்கில் வெளியிட்டு பரப‌ரப்பை ஏற்படுத்தியிருக்கிறார்.

இந்த சம்பவத்தை எப்படி விளங்கி கொள்வது என்று தெரியாமல் காவல் துறையினர் மட்டும் அல்ல,சமூகவியல் நிபுணர்களும் குழ‌ம்பி போயுள்ளனர்.

அமெரிக்காவும் உட்டா நக‌ரை சேர்ந்த ஜேசன் வல்டேஸ் என்னும் அந்த வாலிபர் குற்ற்ங்களுக்கும் புதியவரல்ல.காவல் துறைகும் புதியவ‌ரல்ல.அவர் மீது ஏற்கனவே பல வழக்குகள் உள்ளன.

இந்நிலையில் சமீபத்தில் போதை பொருள் வழக்கு தொடர்பாக காவல் துறையினர் அவரை கைது செய்ய வாரண்டோடு சென்ற‌னர்.வழக்கு விசாரணக்கு ஆஜராகுமாறு சமன் அனுப்பியும் அவர் அதனை மதிக்காமல் போக்கு காட்டி வந்ததால் இந்த‌ நடவடிக்கை மேற்கொண்டனர்.

ஆனால் வால்டேசோ வெஸ்டன் காலனி இன் என்னும் ஓட்டலுக்குள் பதுங்கி கொண்டதோடு வெரோனிகா என்னும் பெண்மணையையும் பிணைக்கைதியாக பிடித்து வைத்து கொண்டார்.

அதன் பிறகு 16 மணிநேரம் காவலர்கள் அந்த பெண்ணை மீட்க அவரோடு போராடியுள்ளனர்.பொதுவாக இது போன்ற பரபரப்பான பதட்ட‌மான சூழலில் என்ன நடக்கிறது என்பதை யாரும் அறிந்து கொள்ள வாய்ப்பில்லை.டிவி சேனல்கள் போட்டி போட்டி கொண்டு நேரடி ஒளிபர‌ப்பு செய்யும் என்றாலும் அவை த‌ரும் செய்திகள் எல்லாம் வெளியில் இருந்தே பெறப்பட்டவையாகவே இருக்கும்.உள்ளுக்குள் என்ன நடக்கிறது என்ப‌தை தெரிந்து கொள்வது கடினமான விஷயமே.அதிலும் குற்ற‌வாளியின் மனநிலையை அறிந்து கொள்வது என்ப‌து இயலாத காரியம்.

ஆனால் இந்த சம்பவத்தின் போதோ பினைக்கைதியாக பெண் மணியை பிடித்து வைத்திருந்த வால்டேசின் மன‌ ஓட்டத்தை பலரும் தெளிவாக புரிந்து கொள்ள முடிந்தது.அதற்கு காரணம் அவரே பேஸ்புக் பக்கத்தில் உள்ளுக்குள் நடப்பவற்றை அப் டேட்டாக வெளியிட்டு வந்தது தான்.

ஒரு மோதலில் சிக்கியிருக்கிறேன்.கொஞ்சம் மோசமான நிலை தான்,ஆனால் எதற்கும் தயாராக‌ இருக்கிறேன் என்று அவர் தனது முதல் செய்தியில் குறிப்பிட்டிருந்தார்.அதோடு ‘நண்பர்களே உங்களை மிகவும் நேசிக்கிறேன்,இங்கிருந்து உயிரோடு வருவேனா என்று தெரியவில்லை…’என்றும் குறிப்பிட்டிருந்தார்.

தொடர்ந்து காவலர்களோடு மல்லுகட்டிய படியே அவர் பேஸ்புக்கிலும் பேசிக்கொண்டிருந்தார்.

தன்னுடன் இருக்கும் பெண்ணின் பெயர் வெரோனிகா என்றும் தெரிவித்தார்.தானும் அந்த பெண்ணும் இருக்கும் புகைபடத்தையும் பேஸ்புக்கில் அவர் நண்பர்கள் பார்வைக்கு சமர்பித்தார்.அழகான கைதி என்னிடம் சிக்கியிருக்கிறாள் என்ர குறிப்போடு இரண்டு புகைப்படத்தை பகிர்ந்து கொண்டார்.

இதனிடையே காவலர்கல் மின்சாரத்தை துண்டித்திருந்தனர். இப்படி செய்வதன் மூலம் பிணைக்கைதியின் உயிருகு தான் காவலர்கள் ஆபத்தை உண்டாக்குகின்ற‌னர் என்றும் மற்றொரு பதிவில் குறிப்பிட்டிருந்தார்.

ஒரு கடத்தல் நாடக‌த்தை அது அரங்கேறும் போதே பின் தொடர்வதற்கான வாய்ப்பாக இந்த பேஸ்புக் பதிவுகள் அமைந்தன.இவற்றை படித்த நண்பர்கலில் சிலர் அவ‌ருக்கு ஆதரவு தெரிவித்தாலும் சிலர் சரண‌டைந்து விடுமாறு அறிவுறை கூறினர்.ஒரு நண்பர் ஒரு படி மேலே சென்று அருகில் உள்ள புதரில் காவலர் ஒருவர் பதுங்கியபடி இருப்பதாக பேஸ்புக் மூலமே தகவல் கொடுத்தார்.அவரும் இந்த தகவலுக்கு நன்றி தெரிவித்து கொண்டார்.

அந்த பெண்ணை விடுவித்துவிட்டேன் ,ஆனால் இந்த … கவலர்கள் எவ்வளவு சொல்லியும் கேளமால் உள்ளே நுழைய முற்படுகின்ற‌னர் ,எல்லாம் மீண்டும் ஆரம்பமாகிற‌து என சில மணி நேரம் கழித்து கடைசி பதிவில் குறிப்பிடிட்டிருந்தார்.அதன் பிறகு அவர் சுடப்பட்டு கொல்லப்பட்டார்.

ஒரு குற்றவாளி காவலர்க‌ளோடு சண்டையிட்ட படி பேஸ்புக்கில் தனது மன‌நிலையை பகிர்ந்த கொண்ட இந்த சம்பவம் காவல்ர்களுக்கு புதிய சிக்கலையும் ஏற்படுத்தியுள்ளது.பேஸ்புக் மூலம் வால்டேசுக்கு தகவல் கொடுத்த நண்பர்கள் மீது வழக்கு பதிவு செய்ய வேண்டுமா,அவர்கள் குற்றவாளிக்கு உதவியாதாக க‌ருதலாமா போன்ற கேள்விகாளுக்கெல்லாம் பதில் தேடுகின்றனர்.

பேஸ்புக்கின் ஆதிக்கம் மற்றும் பாதிப்பை உணர்த்த எத்தனையோ உதாரணங்கள் உண்டு.இது முற்றிலும் புதிதாக இருக்கிறது.

0 comments:

Post a Comment