உகாண்டா அருகில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வாராய்ச்சியில் 2 கோடி ஆண்டுகளுக்கு
முந்தைய ஆப்ரிக்க மனித குரங்கின் எலும்புகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
ஆராய்ச்சியாளர்கள்
இதை தீவிர ஆய்வுக்கு உட்படுத்தி வருகின்றனர். இதன்மூலம் மனித உயிர்களின்
தோற்றம் குறித்து தெரியவரும் என்று நம்பிக்கை தெரிவிக்கப்பட்டுள்ளது.
உகாண்டாவின் நபாக் என்ற பகுதியில் மார்ட்டின் பிக்போர்ட் தலைமையில்
பிரெஞ்ச் ஆராய்ச்சியாளர்கள் மேற்கொண்ட அகழ்வாராய்ச்சியில் இந்த அரிய
எலும்புக்கூடு கண்டெடுக்கப்பட்டது.
இந்த எலும்புக்கூடு மற்றும் மண்டை ஓடு சுமார் 2 கோடி ஆண்டுகளுக்கு(20
மில்லியன் ஆண்டு) முந்தையதாக இருக்கக்கூடும் என்று முதல்கட்ட ஆய்வில்
தெரியவந்துள்ளது.
இத்தனை ஆண்டு பழமையான மனித குரங்கின் எலும்புகள் அகழ்வாராய்ச்சியில்
கண்டெடுக்கப்பட்டுள்ளது இதுவே முதன்முறை என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள்.
இது குறித்து தலைமை ஆராய்ச்சியாளர் மார்ட்டின் வெளியிட்டுள்ள தகவல்:
அகழ்வாராய்ச்சியில் மிகப்பழமையான மனித குரங்கின் எலும்புக்கூடு
கண்டெடுக்கப்பட்டுள்ளது. இதுபற்றி விரிவாக ஆராய்ந்து வருகிறோம்.
முதல்கட்ட ஆய்வில் இது 20 மில்லியன் ஆண்டுகளுக்கு முந்தையது என்பது
உறுதியாகி உள்ளது. மனித தோற்றம் குறித்து துல்லியமாக அறிந்து கொள்ள இந்த
ஆராய்ச்சி பெரிதும் உதவும்.
கண்டுபிடிக்கப்பட்ட எலும்புக்கூடு 11 வயதுடைய ஆண் குரங்கினுடையது
என்பதும் ஆய்வில் கிடைத்த தகவலாகும். இதுகுறித்து மேலும் விரிவான
ஆய்வுக்காக எலும்புகள் பிரான்சுக்கு எடுத்துச் செல்லப்பட உள்ளது.
முழுமையான ஆய்வுக்கு பிறகு உகாண்டாவிடம் திருப்பி அளிக்கப்படும்.
உகாண்டா அருங்காட்சியகத்தில் பொதுமக்கள் பார்வைக்காக இந்த எலும்புகள்
வைக்கப்பட உள்ளது.
கடந்த ஆண்டு சாட் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் 60 லட்சம்
ஆண்டுகளுக்கு முந்தைய மனித எலும்புக்கூடு கண்டெடுக்கப்பட்டது
குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment