இஸ்ரேலின் ஜெருசலேம் நகரில் இரண்டாயிரம் ஆண்டுகால வடிகால் அமைப்பையும்,
ரோமானியர் காலத்து வாள் ஒன்றையும் அந்நாட்டு தொல்லியல் ஆய்வாளர்கள்
கண்டறிந்துள்ளனர்.
பைபிளில் குறிப்பிடப்பட்ட ஜெருசலேம் நகரான தற்போதைய
டேவிட் குடியிருப்புப் பகுதியில் சமீபத்தில் தொல்லியல் ஆய்வாளர்கள் நடத்திய
ஆய்வில் இரண்டாயிரம் ஆண்டுகால வடிகால் கண்டறியப்பட்டது.
இதுகுறித்து இஸ்ரேல் தொல்லியல் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில்
குறிப்பிடப்பட்டிருப்பதாவது: இந்த வடிகால் பைபிளில் கூறப்பட்ட "சிலோம்"
என்ற குளத்துக்கு மழைநீர் கொண்டு செல்வதற்காக வடிவமைக்கப்பட்டது.
ஜெருசலேத்தின் முதல் கோவில் சாலமோன் அரசனால் கட்டப்பட்டது. அக்கோவில்
பாபிலோனியர்களால் கி.மு.586ல் அழிக்கப்பட்டது. இயேசுவின் காலத்தில் வாழ்ந்த
ஏரோது மன்னன் அதே இடத்தில் இன்னொரு கோவிலைக் கட்டினான்.
இக்கோவில் கி.பி. 70ல் ரோமானியப் படையெடுப்பில் அழிக்கப்பட்டது. இந்த
நாளை ஆண்டு தோறும் யூதர்கள் நோன்பு இருந்து கடைபிடித்து வருகின்றனர். இந்த
இரண்டாவது கோவில் அழிக்கப்பட்ட போது ஜெருசலேத்து மக்கள் இந்த வடிகாலில்
பதுங்கி உயிர் பிழைத்தனர்.
இந்நிலையில் தொன்மையான ஒரு வாள் தொல்லியல் ஆய்வாளர்கள் நடத்திய வடிகால்
ஆய்வில் கண்டறியப்பட்டது. இவ்வாள் ஜெருசலேத்தில் கட்டப்பட்ட இரண்டாம்
கோவில் அழிக்கப்பட்ட காலகட்டத்தைச் சேர்ந்தது.
60 செ.மீ நீளம் கொண்ட இந்த வாளோடு அதை உள்ளே வைக்கும் வாளுறையும்
கிடைத்துள்ளது. இந்த வாள் இஸ்ரேலில் முகாமிட்டிருந்த ரோமானியப் படைவீரன்
ஒருவனுடையதாக இருக்கலாம் என்ற அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
0 comments:
Post a Comment