Sunday, August 28, 2011

ஆண் - பெண் உறவில் எதை வெளிப்படையாகச் சொல்லலாம்? எதைச் சொல்லக்கூடாது?

ஆண் - பெண் உறவில் எதைச் சொல்ல வேண்டும், எதைச் சொல்லக் கூடாது என்பதற்கு ஒரு பக்குவம் தேவைப்படுகிறது. 'நன்மை விளையும் என்றால்... பொய் சொல்வதில்கூடத் தவறில்லை' என்கிறார் திருவள்ளுவர்.
'ஆண் - பெண் உறவில் வெளிப்படைத் தன்மை இருக்கவே கூடாதா... அதைச் சொன்னால் பிரச்னைதான் ஏற்படுமா?' என்பது போன்ற கேள்விகள்... ஏன், கோபமேகூட எழலாம். ஆனால், பலநூறு ஆண்டுகளாக, வழிவழியாக புகட்டப்பட்டிருக்கும் பாடங்களின் வழி நடக்கும் மானிட சாதியின் மிச்சம்தான் நாம் என்பதைப் புரிந்து கொள்ளும் பக்குவம் முதலில் நமக்கு வேண்டும்.

'அந்தரங்கம் புனிதமானது’ என்பார்கள். ஆனால், அது ரகசியமானது என்பது மட்டும்தானே சரியானதாக இருக்கும். அந்தரங்கம் இல்லாத மனிதர்களே இருக்க முடியாது என்பது மானுட விதி. இதைப் பெருந்தன்மையோடு ஏற்றுக் கொள்வதுதான் சக மனிதனின் இயல்பாக இருக்க வேண்டும். ஆனால், துரதிர்ஷ்டவசமாக நிலம், வீடு, கார் போல்... சக மானுட துணையும் ஒரு நுகர்பொருள் ஆகிவிட்டது.
தன் மனைவியின் பழைய காதல் வாழ்க்கையை அறிந்துகொண்டு அதைப் பெருந்தன்மையோடு அணுகும் அறிவு முதிர்ச்சியான கணவன் பற்றிய பல படங்கள் தமிழில் வந்திருக்கின்றன. 'நெஞ்சில் ஓர் ஆலயம்’, 'அந்த ஏழு நாட்கள்’ போன்றவை அந்த ரகம். 'அவள் அப்படித்தான்’, 'அவர்கள்’ போன்ற படங்கள் பெண்களின் காதல் வாழ்க்கையை மிக முற்போக்காகக் காட்டிய உன்னதமான படங்கள். தமிழ் இலக்கியங்களைப் பற்றிச் சொல்லவே வேண்டாம். எத்தனையோ கதைகள் அப்படி வந்திருக்கின்றன.
உலகின் வெவ்வேறு திசைகளில் ஆண், பெண் உறவு மாற்றம் என்பது காட்டாறுபோல் பாய்ந்து ஓடிக் கொண்டுஇருக்கிறது. அந்த டிரெண்டை புரிந்து கொள்ளாவிட்டால் நாம் பின்னோக்கித் தள்ளப்படுவோம் என்பது வரலாற்று உண்மை.
ஆண் - பெண் உறவில் எதை வெளிப்படையாகச் சொல்லலாம்? எதைச் சொல்லக்கூடாது என்பது ஒரு கலை.
கணவன் - மனைவி இருவருமே ஒரு விஷயத்தை அடிப்படையாகப் புரிந்துகொள்ள வேண்டும். தன்னுடைய வாழ்க்கைத் துணை எல்லாவற்றையும் சரியாக அறிந்து கொள்ளக்கூடிய புரிதல் கொண்ட துணையா என்பதுதான் அது. அவர் அப்படிப்பட்ட மிகச்சரியான துணை என்பதில் நீங்கள் 'கன்வின்ஸ்’ ஆகிவிட்டால்... உங்கள் கடந்த கால வாழ்க்கை பற்றிய எந்த உண்மைகளையும் சுதந்திரமாகச் சொல்லலாம். அதேநேரம், அவர் தொட்டாற்சிணுங்கி டைப், மிகவும் பிற்போக்கான சிந்தனைகள் கொண்டவர் என்பது புரிந்தபின், அவரிடம் எதையும் சொல்லாமல் இருப்பதே நல்லது. இது உங்களின் தவறு அல்ல. அதனால் குற்ற உணர்ச்சி எதுவும் தேவை இல்லை.
'உண்மைகளைக்கூட சுதந்திரமாகப் பேச முடியாத ஒரு உறவு தேவைதானா?' என்கிற ஒரு கேள்வி, ஒரு நிலையில் உங்களுக்கு ஏற்படக்கூடும். இது வெறும் காதல் ஃப்ளாஷ்பேக் என்கிற குறுகிய வட்டத்தோடு நிறுத்திவிட முடியாது. இந்த சிந்தனை, பூமி அதிர்ச்சி சுழல்போல பல திசைகளையும் பாதிக்கக் கூடியது.
அற்புதமான ஆண் - பெண் உறவில் 'பொய்மை' என்கிற களை தோன்றுவதற்குக் காரணம், 'நல்லவர்'கள் அல்ல. பிற்போக்குத்தனமான பழமைவாதிகள்தான்! எனவே ஒருவரை ஒருவர் புரிந்துகொள்ளுங்கள், மனம் திறந்து பேசுங்கள், எவற்றை எல்லாம் இருவரும் ஏற்றுக்கொள்ளுவார்களோ அதன்படி அவரவர்களுக்கு ஏற்ப பழகிக்கொள்ளுங்கள் பரிமாறிக்கொள்ளுங்கள். அதுதான் நிஜமான சந்தோசமான வாழ்க்கை. வாழ்க்கை வாழ்வதற்கேயன்றி சாவதற்கல்ல.

0 comments:

Post a Comment