கைத்தொலைபேசி பயன்படுத்துபவர்களில் பாதிக்கு மேற்பட்டோர் நெருக்கடியான
போக்குவரத்து உள்ள இடங்களில் கூட கைத்தொலைபேசியில் பேசிக் கொண்டே செல்வது,
குறுஞ்செய்தி அனுப்புவது ஆகியவற்றில் ஈடுபடுகின்றனர்.
இந்த நடவடிக்கை
உயிருக்கே உலை வைக்கும் என சமீபத்திய ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது. பிரிட்டன்
தலைநகர் லண்டன் உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் சமீபத்தில் ஓர் ஆய்வு
நடத்தப்பட்டது.
கைத்தொலைபேசி பயன்படுத்தினால் உயிருக்கு ஆபத்து என அறிவுறுத்தப்பட்ட
இடங்களில் அல்லது சூழல்களில் கைத்தொலைபேசிகளை மக்கள் பயன்படுத்துகின்றனரா
என்று நேரடியாக ஆய்வு செய்யப்பட்டது.
அதன்படி லண்டன், மான்செஸ்டர், எடின்பர்க் மற்றும் கார்டிப் போன்ற
நகரங்களில் பாதசாரிகள் உள்ளிட்டோர் தங்கள் கைத்தொலைபேசி, ஐபாட் மற்றும்
எம்.பி.3 பிளேயர் போன்ற கருவிகளைப் பயன்படுத்திக் கொண்டே செல்வது
கண்டறியப்பட்டது.
நடந்து செல்லும் போது அல்லது வாகனங்களில் செல்லும் போது
கைத்தொலைபேசிகளில் குறுஞ்செய்தி அனுப்புவது, மின் அஞ்சல் அனுப்புவது
போன்றவற்றில் 58 சதவீதம் ஆண்களும், 53 சதவீதம் பெண்களும் ஈடுபடுகின்றனர்.
இந்த நடவடிக்கைகளால் தங்கள் உயிருக்கு ஆபத்து ஏற்படும் என்பதை மூன்று
பேர்களில் ஒருவர் ஒப்புக் கொண்டிருக்கிறார். 10 பேர்களில் ஒருவர் சாலையைக்
கடக்கும் போது ஏதாவது ஒரு மின்னணு கருவியைப் பயன்படுத்திய வண்ணம்
கடக்கிறார்.
தங்கள் கார் போக்குவரத்து நெருக்கடியில் சிக்கியிருக்கும் போது 4
சதவீதம் பேர் மின் அஞ்சல் அல்லது குறுஞ்செய்தி அனுப்புவதாக ஒப்புக்
கொண்டுள்ளனர். வாடகைக் கார் ஓட்டுனர்களிடம் ஆய்வு மேற்கொண்ட போது சாலையில்
செல்லும் போது கைத்தொலைபேசி உள்ளிட்ட கருவிகளைப் பயன்படுத்துவோர்
மயிரிழையில் தங்கள் கார்களில் அடிபடுவதில் இருந்து தப்பித்துள்ள சம்பவங்கள்
கடந்த ஐந்தாண்டுகளில் பலமுறை நிகழ்ந்துள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.
இந்த ஆய்வை நடத்திய ஜான் ஓரோர்க் கூறுகையில்,"பாதசாரிகள் இந்த
நடவடிக்கைகளைத் தவிர்த்து தங்கள் உயிரைக் காப்பாற்றிக் கொள்வதில்
விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும்" என்றார்.
0 comments:
Post a Comment