Sunday, August 21, 2011

உலர் திராட்சையின் மருத்துவ குணங்கள்

திராட்சை நினைக்கும்போதே இனிக்கும் பழங்களில் ஒன்று. இவற்றில் கறுப்பு திராட்சை, பச்சை திராட்சை, பன்னீர் திராட்சை, காஷ்மீர் திராட்சை, ஆங்கூர் திராட்சை, காபூல் திராட்சை, விதையில்லா திராட்சை என பல வகையுண்டு.குழந்தைகள் வளர்ச்சிக்கு, இரத்த விருத்திக்கு, உடல் வலி குணமாக, கர்ப்பிணிப் பெண்களுக்கு, மாதவிலக்குக் காலங்களில் பெண்களுக்கு, மலச்சிக்கல் தீர, குடல்புண் ஆற, இதயத் துடிப்பு சீராக, சுகமான நித்திரைக்கு என்று இதன் பயனை அடுக்கிக்கொண்டே போகலாம்.

இதில் வைட்டமின் பி மற்றும் சுண்ணாம்புச் சத்து அதிகம் நிறைந்துள்ளது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் உகந்ததுதான் இந்த உலர்ந்த திராட்சை. இந்தப் பழம் அதிக மருத்துவக் குணங்களைக் கொண்டது.
குழந்தைகள் வளர்ச்சிக்கு: வளரும் குழந்தைகளுக்கு ஏற்ற பழம் இது. எலும்புகள் நன்றாக உறுதியாக வளரவும், பற்கள் வலுப்பெறவும் மற்றும் உடல் வளர்ச்சிக்கும் தேவையான சத்து கால்சியம்தான்.
கால்சியம் அதாவது சுண்ணாம்புச் சத்து இந்தப் பழத்தில் அதிகம் நிறைந்துள்ளது. இந்தப் பழத்தை இரவு உணவுக்குப் பிறகு 10 பழங்கள் வீதம் எடுத்து பாலில் போட்டு காய்ச்சி பாலையும் பழத்தையும் சாப்பிட்டு வந்தால் குழந்தைகள் ஆரோக்கியமாகவும், பலமாகவும் இருப்பார்கள்.
இரத்த விருத்திக்கு: எலும்பு மஞ்ஜைகளிலிருந்து இரத்தம் ஊறுவதற்கு காய்ந்த திராட்சை மிகவும் உதவுகிறது. இந்தப் பழத்தை எடுத்து வாயில் போட்டு கொஞ்சம் கொஞ்சமாக சாறு இறக்கினால் எலும்பு மஞ்ஜைகள் பலமடைந்து இரத்தம் அதிகம் சுரக்கும். மேலும் இரத்தத்தை சுத்தப்படுத்தி உடலுக்கு புத்துணர்வைக் கொடுக்கும்.
உடல் வலி குணமாக: பெருஞ்சீரகத்தோடு இப்பழத்தை சேர்த்து கசாயம் செய்து அருந்தி வந்தால் உடல் வலி அனைத்தும் தீரும். இந்தப் பழத்தை அவ்வப்போது ஒன்று இரண்டு சாப்பிட்டு வருதல் நல்லது.
கர்ப்பிணிப் பெண்களுக்கு கருவில் வளரும் குழந்தைக்குத் தேவையான அனைத்து சத்துக்களும் தாயின் மூலம் தான் கிடைக்கும். தாயின் ஆரோக்கியமே முதலில் முக்கியம். அதனால் கர்ப்பிணிப் பெண்கள் உலர்ந்த திராட்சையை பாலில் கலந்து கொதிக்க வைத்து பருகி வந்தால் பிறக்கும் குழந்தை குறையில்லாமல் ஆரோக்கியமாக பிறக்கும்.
மாதவிலக்குக் காலங்களில் பெண்களுக்கு: மாதவிலக்குக் காலங்களில் சில பெண்களுக்கு வயிற்றில் வலி இருந்துகொண்டே இருக்கும். இந்த பிரச்சனை தீர கைகொடுக்கும் மருந்தாக உலர்ந்த திராட்சை பயன்படுகிறது. இந்தப் பழத்தை நீரில் போட்டு காய்ச்சி, கசாயமாக செய்து சாப்பிட்டால் வலி மறைந்து போகும்.
குடல்புண் ஆற: அஜீரணக் கோளாறுகளால் குடலில் உள்ள வாய்வுக்கள் சீற்றம் ஏற்பட்டு குடல் சுவற்றை புண்ணாக்கி விடுகின்றன. இவர்கள் உலர்ந்த திராட்சைப் பழங்களை நீரில் கொதிக்கவைத்து கஷாயம் போல் செய்து அருந்தி வந்தால் குடல் புண்கள் குணமாகும்.
இதயத் துடிப்பு சீராக: சிலருக்கு இதயம் மிக வேகமாகத் துடிக்கும். இவர்கள் எப்போதும் ஒருவிதமான பதட்டத்துடனே காணப்படுவார்கள். இவர்கள் பாலில் இந்தப் பழங்களைப் போட்டு காய்ச்சி ஆறியபின் மறுபடியும் காய்ச்சி, பாலையும் பழத்தையும் சாப்பிட்டு வந்தால் இதயத் துடிப்பு சீராகும்.
சுகமான நித்திரைக்கு: தினமும் படுக்கைக்குச் செல்வதற்கு அரைமணி நேரம் முன்பு பாலில் நான்கு அல்லது 5 காய்ந்த திராட்சையைப் போட்டு கொதிக்க வைத்து வடிகட்டி பாலை அருந்தி வந்தால் சுகமான நித்திரை கிடைக்கும். தினமும் உலர்ந்த திராட்சையை சாப்பிட்டு நோயின்றி ஆரோக்கியமாக வாழ்வோம்.
உலர்ந்த திராட்சை உண்போர் கவனத்திற்கு: சளி பிடித்திருக்கும் போதும், காச நோய் உள்ளவர்களும், வாத நோய் உள்ளவர்களும் திராட்சை அல்லது உலர்ந்த திராட்சைக் கொண்டு செய்யப்படும் மருந்துகளை தவிர்ப்பது நல்லது.
உலர்ந்த திராட்சையை பதப்படுத்தும் போது ரசாயன அமிலங்கள் கொண்டுதான் பதப்படுத்துகின்றனர். எனவே உலர்ந்த திராட்சையை அப்படியே பயன்படுத்துவது மிகவும் தவறு. அதனை நன்றாக கழுவிவிட்டு அல்லது தண்ணீரில் சிறிது நேரம் ஊறவிட்டு பின்னர் நன்கு கைகளால் பிசைந்து கழுவ வேண்டும்.
குழந்தைகளுக்கு உலர்ந்த திராட்சையைக் கொடுக்கும்போதும் நன்கு கவனமாக கழுவிய பின்னரே கொடுக்க வேண்டும்.

0 comments:

Post a Comment