Monday, October 31, 2011

புகைப்பிடிப்பதால் ஏற்படும் பாதிப்புகளை ரத்த பரிசோதனை மூலம் அறியலாம்

புகைபிடிப்பதால் ஏற்படும் இதய பாதிப்புகளை உடனே அறிந்து கொள்ள எளிய ரத்த பரிசோதனை போதும் என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள்.
புகை பிடிப்பது உடல் நலத்துக்கு தீங்கானது என்று விழிப்புணர்வு ஏற்படுத்தும் பிரசாரங்கள் ஒரு பக்கம் தீவிரமாக நடக்கின்றன. ஆனாலும் புகைப்பழக்கத்தை யாரும் விட்டதாக தெரியவில்லை.
புகை, மது பழக்கங்களால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து அமெரிக்கா வாழ் இந்திய மருத்துவ ஆராய்ச்சியாளர் ஆனந்த் ரோஹட்கி தலைமையில் சமீபத்தில் ஒரு ஆய்வு நடத்தப்பட்டது.
புகை பிடிக்கும் பழக்கம் உள்ள 30 முதல் 65 வயதினர் சுமார் 3,200 பேரை வைத்து ஆய்வு நடந்தது. இதுபற்றி ஆனந்த் ரோஹட்கி கூறியதாவது: தொடர் புகை பழக்கம் நுரையீரல், இதயம், ரத்த குழாய்களை பாதிக்கிறது.
உரிய மருத்துவ சிகிச்சை இல்லாத பட்சத்தில் உயிர் இழப்பு ஏற்படும் வாய்ப்பும் அதிகம். இந்நிலையில் ஆரம்ப கட்டத்திலேயே இத்தகைய பாதிப்புகளை எளிதாக கண்டறிய ஏதுவாக எளிய ரத்தபரிசோதனை அறிமுகமாகி உள்ளது. இதன் மூலம் புகைப்பவர்கள் பயங்கர பாதிப்பில் இருந்து விடுபட முடியும்.

ரத்த நாளங்கள் பாதிக்கப்படுவது பற்றியும் இந்த பரிசோதனை மூலம் அறிந்து கொள்ளமுடியும். பாதிக்கப்பட்ட நுரையீரல் செல்லில் காணப்படும் பி(எஸ்பி - பி) என்ற புரத செல்களின் எண்ணிக்கையை துல்லியமாக கணக்கிட்டு இந்த பாதிப்பு கண்டறியப்படுகிறது. பாதிப்புக்குத் தக்கவாறு உரிய சிகிச்சை பெற்று குணம் பெற முடியும்.
ஆய்வு எடுத்துக் கொள்ளப்பட்டவர்களுக்கு ரத்த பரிசோதனை செய்யப்பட்டது. அவர்களின் நுரையீரல் செல்லில் உள்ள புரத எண்ணிக்கை அடிப்படையில் பாதிப்பு துல்லியமாக கண்டறியப்பட்டது.
உரிய நேரத்தில் சிகிச்சை அளித்ததில் அவர்களது உடல்நலத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டது. இதயம், ரத்த நாளங்களின் நிலை பற்றி ரத்த பரிசோதனை மூலமாக தெரிந்துகொள்வது என்பது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த எளிய முறை விரைவில் நடைமுறைக்கு வர உள்ளது.

0 comments:

Post a Comment